வங்காளதேசத்தில் பல்வேறு இடங்களில் இந்து கோவில்கள் மீது புதன்கிழமை தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலைத் தொடர்ந்து மத ரீதியான கலவரம் ஏற்பட்டுள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற எல்லை பாதுகாப்பு படையினரையும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு படையினர் கடுமையாக போராடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வன்முறையில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று பேகம்கஞ்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். அப்போது, இந்து கோவில் மீது போராட்டக்காரர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். கோவில் நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். இதில் கோவில் கமிட்டி நிர்வாக உறுப்பினர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து மத தலைவர்களிடம் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்து உள்ளார்.