படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் 24/01/2021 அன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ்.ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
சுகாதார விதி முறைகளிற்கு ஏற்றாற்போல் இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஷ், சமூக நலன் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌனன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் ஏற்பட்டன.
சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றியபோதே கடந்த 2006 ஜனவரி 24 ஆம் திகதி, திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன், அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.