இலங்கையின் கடல் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 27/01/2021 அன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அங்கத்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இங்கு உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய அமைப்பாளர் த. சுரேஷ்
இந்திய இலங்கை எல்லையில் நடந்த துன்பியல் சம்பவத்தில் எமது தொப்புள் கொடி உறவுகளான நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்தமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமாகும்.
எம்மை பொறுத்தமட்டில் இதை ஒரு படுகொலையாகவே கருதுகின்றோம். ஏனென்றால் படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது படகு விபத்துக்குள்ளாகி அந்த படுகு கடலில் மூழ்கும் வரை இலங்கை கடற்படை என்ன செய்து கொண்டு இருந்தது.
இலங்கை கடற்படை மீனவர்களை காப்பாற்ற முடியாத ஒரு திறமையற்ற கடற்படையாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. எனவே இது தமிழக மீனவர்கள் தமிழ் மீனவர்கள் என்ற காரணத்திற்காகவே இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனவே இந்த மீனவர்கள் உயிரிழப்புக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்.