இந்த ஆண்டிலிருந்து அரை தொழில்சார் லீக் மற்றும் தொழில்சார் லீக் கால்பந்தாட்ட போட்டிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உலகக்கிண்ண கால்பந்தாட்ட தகுதிகான் போட்டிகளிலும் இலங்கை அணி பங்குபற்றவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கால்பந்தாட்ட தகுதிகான் போட்டியை இலங்கையில் நடத்தவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (09.02.2021) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன, இலங்கையின் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிகைகள் குறித்து கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் விளையாட்டுத்துறை மீள் கட்டமைப்பதில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும். இங்கு கிரிக்கெட் விளையாடுவதை விடவும் அதிகமாக கால்பந்து விளையாடுகின்றனர். ஆனால் உலக தரவரிசையில் நாம் 206 ஆவது இடத்தில் உள்ளோம். ஆசியாவில் இறுதியான இடத்தில் நாம் உள்ளோம் என்பதே இதன் வெளிப்பாடாகும். எனவே நாட்டின் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் குறுகிய மற்றும் இடைக்கால அதேபோல் நீண்டகால திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்.
அதேபோல் பயிற்சிகளை முன்னெடுப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. இலங்கையின் கால்பந்தாட்ட விளையாட்டை பொறுத்தவரை அரை தொழில்சார் லீக் போட்டிகளையேனும் விளையாடுவதில்லை. எனவே இந்த ஆண்டில் இருந்து அரை தொழில்சார் லீக் மற்றும் தொழில்சார் லீக் போட்டிகளை ஆரபிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதம் இறுதியில் இருந்து அதற்கான பயிற்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அதேபோல் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தகுதிகான் போட்டிகளிலும் நாம் பங்குபற்றவுள்ளோம். இதில் இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போட்டியை இலங்கையில் நடத்தவும் எதிர்பார்க்கிறோம். அதேபோல் உலக தரப்படுத்தலில் குறைந்தது 150 இடங்களுக்குள்ளாவது இலங்கையை வைத்துகொள்ள வேண்டும் என்பதும் எமது இலக்காகும் என்றார்.