முல்லைத்தீவு குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சியின் போது, எண்முக சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு செல்வதற்கு ஊடகவிலாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலைக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்கள் முன் அனுமதி பெறவேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலையில் ஊடகவியலாளர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, தொல்பொருள் திணைக்களத்தில் விண்ணப்பித்து, குறிப்பிட்ட நாளில் மட்டுமே படம் எடுக்கலாம் என்றும் மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் அகழ்வின் போது, பல்லவர் கால எண்முக சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அது சிவலிங்கம் இல்லை எனவும், அநுராதபுர காலத்துக்குரிய பாரிய தூபியின் முடிப்பகுதியே என்றும், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், குருந்தூர்மலைப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த அஷ்டதார லிங்கத்தை ஒத்திருப்பதாக இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோவிலில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் அஷ்டதார லிங்கத்தை ஒத்த லிங்கம், தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த கூந்தூர் முருகன் ஆலயத்திலும் உள்ளது. குருந்தூர் மற்றும் கூந்தூர் ஆகிய பெயர்களும் ஒத்தவையாக உள்ளன.