அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 11/02/2021 அன்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியினால் தொல்பொருள் ஆராய்ச்சிக்கென செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறித்த செயலணியினால் இன்று வடக்கில் குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி நடக்கும்போது சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சிவலிங்கம் போன்ற வடிவுடைய சிதைவுகள் தாராலிங்கம் என்று சிவபெருமானுடைய மறுவுறுவத்திற்குரிய சிதைவுகள் ஆகும்.
குருந்தமரம் இருந்த அந்த குருந்த மலையிலே சிவபெருமானின் ஆலயம்தான் கிடைக்கும் ஏனென்றால், குருந்தமரம் சிவபெருமானுக்கு மிகவும் வேண்டியதொரு மரம்.
அரச மரம் எந்தளவுக்கு புத்த பெருமானுடன் தொடர்புபட்டதோ, எங்கெங்கெல்லாம் அரச மரம் இருக்கிறதோ அங்கங்கெல்லாம் நீங்கள் புத்தர் சிலையை வைக்கின்றீர்கள்.
அதேபோன்று குருந்தமரம் சிவபெருமானுக்கு மிகவும் வேண்டியதொரு மரம். குருந்தமர நிழலில் இருந்துதான் சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
அதேபோன்று வெடுக்குறாரி, குசேனார் மலை, பங்குடாவெளி, கன்னியா போன்ற இந்துக்களுக்கு சொந்தமான இடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற ரீதியில் அபகரிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.