நடிகர் அஜித் கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளிங் செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 30 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளதாகவும் அவர் உடன் பயணித்தவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர். இவர் நடிப்பை தவிர்த்து பைக் ரேஸிங், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டவர்.
சமீபத்தில் நண்பர்களுடன் 10 ஆயிரம் கி.மீ. பைக் ட்ரிப் சென்ற அஜித், தற்போது சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். ஐதராபாத்தில் நண்பர்களுடன் அவர் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்துடன் சைக்கிளிங் சென்ற சுரேஷ் குமார் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘அஜித்துடன் இந்த 15 ஆண்டு கால சைக்கிள் பயணங்கள் மறக்க முடியாதவை. அவருக்கு பிடித்த விளையாட்டுகளுள் சைக்கிளிங்கும் ஒன்று. பிசியான ஷூட்டிங்கிற்கு இடையிலும், ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் எங்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளிங் வந்துள்ளார் அஜித்.
ஐதராபாத், விசாகப்பட்டிணம், கூர்கு, கோவை, திருப்பதி என ஏராளமான இடங்களுக்கு சென்றிருக்கிறோம். அவரது கடின உழைப்பை கண்டு வியந்திருக்கிறேன். இதுவரை நாங்கள் 30 ஆயிரம் கி.மீ.க்கு மேல் சைக்கிளில் பயணித்திருக்கிறோம். வெளிநாடுகளில் இன்னும் பல ஆயிரம் தூரம் அவருடன் பயணிக்க வேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி :மாலைமலர்