தந்தை இறந்த பின், அவரின் கால்டாக்ஸி டிரைவர் வேலையை தொடர்கிறார் ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்). உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் அரசியல்வாதி மரகதவேலை (‘ஆடுகளம்’ நரேன்) கொல்ல கிளம்பும் கூலிப்படை ஒன்று, ஜமுனாவின் கால் டாக்ஸியில் ஏறுகிறது. இதை அறியும் போலீஸ், கூலிப்படையை துரத்துகிறது. இதில் இருந்து ஜமுனா எப்படி தப்பிக்கிறார், அவர் தந்தை மரணத்துக்கு யார் காரணம்? கூலிப்படை, அரசியல்வாதியை கொன்றதா? என்பதை ட்விஸ்டோடு சொல்கிறது படம்.
பெண் கால் டாக்ஸி டிரைவரின் பின்னணியில் பரபரப்பான த்ரில்லர் கதையை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, காருக்குள் கூலிப்படை ஏறியதும் தொடரும் அமைதியான பரபரப்பு, அடுத்து என்ன நடக்கும்என்கிற எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் விறுவிறுப்பு என முதல்பாதி படத்தில், மிதமான வேகம் இருக்கிறது. பின்பாதியில் வரும் ட்விஸ்ட் ஆச்சரியப்படுத்தி கதைக்கு வலு கூட்டினாலும் அதை நோக்கி இழுக்கப்படும் திரைக்கதை, ‘டயர்ட்’ ஆக்கிவிடுகிறது.
கூலிப்படையினர், ஐஸ்வர்யாவை ஏதும் செய்துவிடுவார்களோ என்கிற பதைபதைப்பு கதையின் தொடக்கத்தில் இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தப் பதற்றம் டொப்பென்று விழுந்துவிடுவது ஏமாற்றம். அவர்களைப் பிடிக்க வரும் போலீஸ் ஒன்றுமே செய்யாமல், போனில் பேசிக்கொண்டே நிற்பதும் போவதுமான பலவீனமான காட்சியமைப்புகள் பார்வையாளனை கதைக்குள் இழுத்து அமர்த்த தவறுகின்றன. காருக்குள் ஏறும் அபிஷேக், இசைக் கலைஞராக செய்யும் விஷயங்களில் துளியும் காமெடி இல்லை.
பெண் கால் டாக்ஸி டிரைவர் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மொத்தக் கதையும் அவரை மையப்படுத்திதான் என்பதால், உணர்ந்து நடித்திருக்கிறார். கூலிப்படையால், ஆபத்து ஏற்படலாம் என தவிப்பது, கிளைமாக்ஸ் திருப்பத்தில் வெளிப்படும் அமைதியான கோபம் ஆகியவற்றில் ஆற்றல் மிகுந்தநடிப்பை வழங்கி இருக்கிறார்.‘ஆடுகளம்’ நரேன், ஓர் அரசியல்வாதியின் ‘நேர்மை’யை அழகாகப் பிரதிபலிக்கிறார். எம்.எல்.ஏ கவிதாபாரதி, மணிகண்டன் ஆகியோர்தங்கள் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.
காருக்குள் நடக்கும் காட்சிகளை படமாக்க மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் உழைப்பு, பளிச்சென்று தெரிகிறது. அந்த உழைப்புக்கு ஜிப்ரானின் பின்னணி இசை, படம் முழுவதும் கைகொடுத்திருக்கிறது.
சில காட்சிகளை இன்னும் ‘ட்ரிம்’ செய்து, திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்ந்திருந்தால் ‘டிரைவர் ஜமுனா’ கம்பீரமான பெண் மைய படமாக வந்திருக்கும்.