ஊழியர் சகாய நிதியச் (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாம் மதிப்பீடு) பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவித்தது. ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகளை முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவின் தலைமையில் நேற்று முன்தினம் (04) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான இணக்கங்கள் தெரிவிக்கப்பட்டன.
விசேடமாக இந்தியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய கட்டாயமாக இந்திய சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். எனினும் அவர்கள் அந்நாட்டில் பணியாற்றிவிட்டு மீண்டும் நாடு திரும்பும் போது சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிப்பு செய்த நிதியை பெற்றுக்கொள்ள 58 வயது நிரம்பும் வரை காத்திருக்க வேண்டும்.
எனினும், இலங்கையில் பணிபுரியும் இந்தியர்கள் அவர்கள் மீண்டும் அவர்களது தாய்நாட்டுக்கு செல்லும் போது சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிப்பு செய்த நிதியை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக வயது வரையறை காணப்படுவதில்லை. அதற்கமைய, இந்தியாவில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் 58 வயது நிரம்புவதற்கு முன்னர் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிப்பு செய்த நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு இவ்வாறு ஊழியர் சகாய நிதியத் (திருத்தச்) சட்டமூலம் எதிர்வரும் 07 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டவுள்ளது.
அதேபோன்று, சேமலாப நிதியத்துக்கு பதிவு செய்யும் செயன்முறையை நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளவும் உறுப்பினர்களுக்கு தமது மாதாந்த பங்களிப்பு வைப்பிலிடப்படுவதை கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவல் SMS மூலம் அறிவிக்கும் வகையில் தயாரிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழான கட்டளை அதேதினம் (07) பாராளுமன்றத்துக்கு முன்வைக்க குழுவின் இணக்கம் வழங்கப்பட்டது.
அத்துடன், 1956ஆம் ஆண்டு 47ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும், பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தும் சட்டத்தின் கீழான ஒழுக்குவிதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறித்தும் இக்குழுவில் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.