வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றாலே பல லட்சங்களில் செலவாகும் என்பது பலரும் அறிந்ததுதான். பிரேசில், கியூபா, சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு இலவச உயர் கல்வி வழங்குவதையும் கேள்விபட்டிருக்கலாம். ஆனால், தங்கள் நாட்டுக்குப் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச உயர் கல்வியை வழங்குகிறது ஜெர்மனி.
ஏன் இலவசம்? – ஜெர்மனியில் 300க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் கணிசமானவை உலகத் தரவரிசையில் 300 இடங்களுக்குள் இருப்பவை. இவற்றில் சிலவற்றைத் தவிர்த்து, வெளிநாட்டு மாணவர்கள் உள்பட அனைவரும் இளங்கலை, முதுகலை கல்வியை இலவசமாக எந்த அரசுப் பல்கலைக்கழகத்திலும் படிக்கலாம்.
நிர்வாகக் கட்டணமாக ஆண்டுக்கு 200-300 யூரோ வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணமும் வசிக்கும் மாகாணத்தில் ரயில், பேருந்து, டிராம் எனப் பொது போக்குவரத்தில் இலவசமாகப் பயணிக்கப் பயணச்சீட்டாகத் திருப்பி அளிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத் திலேயே பல்கலைக்கழகத்தில் பல வசதிகளையும் இலவசமாகப் பெறலாம்.
கல்வி எல்லாருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பது ஜெர்மனி அரசின் குறிக்கோள். திறமைமிக்க மாணவர்களே வெளிநாடுகளிலிருந்து ஜெர்மனிக்குப் படிக்க வருகிறார்கள். இப்படித் திறமையான மாணவர்கள் ஜெர்மனிக்கு வந்து படித்து அங்கேயே வேலையும் செய்வதால், அது பொருளாதாரரீதியாக ஜெர்மனிக்கு நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஆகவே, திறமைமிக்க மாணவர்களை ஈர்க்கும் நோக்கில் இலவச உயர் கல்வியை ஜெர்மனி வழங்குகிறது.
செலவைச் சமாளிக்கலாம்: இலவச உயர் கல்வியின் தரம் குறைவாக இருக்குமா என்கிற கேள்வி எழ வாய்ப்பில்லை. ஜெர்மனிப் பல்கலைக்கழகங்கள் கல்விக்கும் சிறந்த ஆராய்ச்சிக்கும் பெயர் பெற்றவை. அதனால், பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜெர்மனியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
பிற ஐரோப்பிய நாடுகளைவிட ஜெர்மனியில் வாழ்வதற்கான செலவு மிகக்குறைவு. அத்தியாவசிய தேவைகளுக்கான மாதச் செலவை நகரைப் பொறுத்து 600-800 யூரோக்களில் முடித்துவிடலாம். எத்தனை மாதங்கள் ஜெர்மனியில் படிக்க விரும்புகிறோமோ அத்தனை மாதங்களுக்கு மட்டும் வாழ்வதற்கான செலவை வங்கிக் கணக்கில் காட்ட வேண்டியிருக்கும். இந்தப் பணத்தை யாருக்கும் அனுப்ப வேண்டியதில்லை.
உங்கள் வங்கிக் கணக்கிலேயே வைத்துக்கொள்ளலாம். ஜெர்மனியில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்யவும் அனுமதி உண்டு. அதன் மூலம் வரும் வருமானமே மாதாந்திரச் செலவைச் சமாளிக்கப் போதுமானது. ஆகவே, ஜெர்மனிக்கு வந்த பிறகு ஓரிரு மாதங்களில் பகுதி நேர வேலை வாய்ப்பைப் பெற்றவுடன் இந்திய வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணம் பொதுவாக இங்கே தேவைப்படுவதில்லை.
ஜெர்மனி அரசின் ’DAAD’ அமைப்பு பலதரப்பட்ட கல்வி உதவித்தொகையை வெளிநாட்டு மாணவர்களுக்கும் வழங்குகிறது. இத்தொகை படிக்கும் பல்கலைக்கழகப் படிப்பைச் சார்ந்து அமையும். அதன் விவரங்களை https://www.daad.de/en/ என்ற தளத்தில் பார்க்கலாம். தவிர பல பல்கலைக்கழகங்கள் சிறந்த மாணவர்களுக்குத் தனித்தனி உதவித்தொகைகளை வழங்குகின்றன. படிக்க விரும்பும் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் அதை அறியலாம்.
எப்போது சேர்க்கை? – சேர்க்கைக்கான அனுமதி, தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம், படிப்பைப் பொறுத்து மாறுபடும். சில பல்கலைக்கழகங்கள் இணையவழியில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களைச் சேர்க்கின்றன. இன்னும் சில பல்கலைக்கழகங்கள் காணொளி வாயிலாக நேர்முகத் தேர்வை நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
சில பல்கலைக்கழகங்கள் முந்தைய படிப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துத் தேர்வுசெய்கின்றன. மேலும் ‘TOEFL’, ‘IELTS’ போன்ற ஆங்கிலத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது இளங்கலை படிப்பை ஆங்கிலத்தில் முடித்திருக்க வேண்டும்.
ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலான படிப்புகளில், பயிற்று மொழி ஆங்கிலம் என்றாலும், பொதுவெளியில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. ஜெர்மனியில் வாழ ஜெர்மன் மொழியைக் கற்பது அவசியம். கிட்டத்தட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவச ஜெர்மன் மொழிப் பயிற்சியை வழங்குகின்றன. ஜெர்மனிக்கு வரும் முன்பாக அம்மொழியைக் கற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஜெர்மானியப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. பொதுவாகக் கோடைக் கால மாணவர் சேர்க்கைக்கு ஜனவரி 15-ம் தேதியும், குளிர்கால மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 15-ம் தேதியும் விண்ணப்பிக்க இறுதி நாட்களாகும்.