நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரரான பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே, தங்கக் காலணி விருதை வென்றுள்ளார்.
32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று வாகை சூடியுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் நடைபெற்ற 64 போட்டிகளில் 172 கோல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டிக்கு சராசரியாக 2.69 கோல் வீதம் பதிவாகி உள்ளது.
இதில் மொத்தமாக 8 கோல்களை பதிவு செய்த எம்பாப்பே, தங்கக் காலணி விருதை வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மட்டும் அவர் முத்தான 3 கோல்களை பதிவு செய்து அசத்தி இருந்தார். தொடரில் அதிக கோல்களை பதிவு செய்யும் வீரருக்கு வழங்கப்படும் விருது இது.
மெஸ்ஸி 7 கோல்கள் பதிவு செய்துள்ளார். அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வரஸ் மற்றும் பிரான்ஸின் ஜூரூ தலா 4 கோல்களை பதிவு செய்துள்ளனர்.