விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கினாா் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அமெரிக்காவின் பெரும் செல்வந்தா்களில் ஒருவராக ராஜ் ராஜரட்ணம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட திடீா் விஜயம் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
யாழ். போதனா மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். அமெரிக்கா திரும்பும் முன்னர் அரசியல்வாதிகள் சிலரை சந்திக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2007ஆம் ஆண்டு பங்குச் சந்தையை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எவ். பி. ஐ. அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவரின் சொத்துக்களும் முடக்கப்பட்டன. எனினும், அவர் அந்தவழக் கில் போராடி தன்னை நிரபராதி என்று நிரூபித்தார்.
சிறையில் இருந்த காலத்தில், அவர் எழுதிய “Uneven Justice” என்னும் நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு – ” விளைந்த நீதி” என்ற பெயரில் விரைவில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளது என்றும் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளா்ந்தவரான இவா், அமெரிக்காவில் சிறையிலிருந்து விடுதலையாகிய உடனடியாகவே யாழ்ப்பாணத்தை நோக்கி வந்திருப்பது ஏன் என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுந்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் ராஜரட்ணம் பங்களா ஒன்றை கட்டத் தொடங்கியிருப்பதாக அறியவருகின்றது. யாழ்ப்பாணத்திலேயே வந்து தங்கியிருப்பதற்கு அவா் தீா்மானித்திருப்பதாகவும், அதற்காகவே இந்த பங்களா அமைக்கப்படுவதாகவும் யாழ்ப்பாணத்தில் சில வட்டாரங்கள் தெரிவித்தன. அதனைப் பாா்வையிடுவதும், தனது எதிா்காலத்தை திட்டமிடுவதும்தான் அவரது யாழ். விஜயத்தின் நோக்கம் எனத் தெரிகின்றது.