நாட்டை அரசியல்வாதிகளே சீரழித்துள்ளதால் புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி எம்பி.யும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதால் நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது. கந்தகாடு புனர்வரழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் முன்பு 2 வருட காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இறுதி ஆண்டில் தொழிற்துறை தொடர்பான பயிற்சி வழங்கப்படும் ஆனால் தற்போது 6 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கும் தரப்பினர் ஹெரோயின் போதைப்பொருள்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் தற்போது ஐஸ்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டியுள்ளது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டை அரசியல்வாதிகளே சீரழித்துள்ளதால் புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். அதேவேளை மக்களின் போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள். போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும் என்றார்.