பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்குவதற்கான கலந்துரையாடலை தொடங்கியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இருந்து சுயேட்சையாக இயங்க வேண்டும் என்ற கலந்துரையாடலை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திசநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் ஏற்கனவே பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்களுடன் மற்றொரு குழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்பார்த்த தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, தற்போதுள்ள பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் தீர்மானங்களை அரசு மேற்கொள்வதால் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுஜனபெரமுனவைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக கொழும்பு வந்திருக்கும் பஸில் ராஜபக்ஷவுக்கு கட்சிக்குள் உருவாகிவரும் இந்த நெருக்கடி அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. பொதுஜன பெரமுன என்ற பெயரில் தொடா்ந்தும் செயற்படுவதிலுள்ள நெருக்கடியைத் தொடா்ந்தே பெரும்பாலானவா்கள் சுயேச்சையாகச் செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.