ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
ஐ.நா. தனது அங்கத்துவ நாடுகளின் அரசியல் பொருளாதார கலாச்சார ஆகியவற்றுடன் மனித உரிமை போன்று பல விடயங்களை நீண்ட காலமாக கண்காணித்து வருவது வழமை. இவற்றில் மனித உரிமையின் ஓர் அங்கமாக அதன் உறுப்பு நாடுகள் மீது விதிமுறை, பொறி முறைகளுக்குள், மிக புதிதாக உள்ளடக்கப்பட்டதே ஐ.நா.வின் பூகோள சுற்று ஆய்வு. ஐ.நா.மனித உரிமை சபையின் ஒரு பகுதியான பூகோள சுற்று ஆய்வு (Universal Periodic Review – UPR) என்பது பற்றி, முன்பு பல தடவை எழுதியுள்ள காரணத்தினால், அவ் விளக்கத்தை இங்கு மிக சுருக்கமாக தருகிறேன்.
அதாவது, 2006ம் ஆண்டு மார்ச் 15ம் திகதி, ஐ.நா.பொதுச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மனத்திற்கு அமைய, ஐ.நா.மனித உரிமை சபை ஆரபிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2007ம் ஆண்டு யூன் மாதம், ஐ.நா.வின் பூகோள சுற்று ஆய்விற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகியது.
இதனது நோக்கம் என்னவாகவுள்ளதென நாம் ஆராய்வோமானால் – ஐ.நா.வின் நூற்று தொண்ணூற்று மூன்று (193) அங்கத்துவ நாடுகளீனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஐ.நா. உடன்படிக்கைகள், வாக்குறுதிகளை நாடுகள் மதித்து நடைமுறை படுத்துகின்றனவா? எப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது? சில நாடுகள் அவற்றை மதிக்காத காரணத்தினால், அவ் நாடுகளில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் என்ன நிலையில் உள்ளது? போன்ற விடயங்களை ஆராய்வதற்கான பொறி முறையே பூகோள சுற்று ஆய்வு. இது கடந்த ஒரு தசாப்பதங்களிற்கு மேலாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் பூகோள சுற்று ஆய்வு, வருடத்தில் மூன்று தடைவை, அதற்கான ‘பூகோள சுற்று ஆய்வு செயற்குழுவினால்’ கூட்டத் தொடராக நடாத்தப்படுகிறது. இவ் கூட்ட அமர்வில், பூகோள சுற்று ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஐ.நா. அங்கத்துவ நாடு – எப்படியாக எவற்றை நடைமுறை படுத்தியுள்ளரர்கள், எதற்காக சிலவற்றறை நடைமுறைப்படுத்தவில்லை போன்ற கேள்விகளை, மற்றைய அங்கத்துவம் நாடுகள், அவ் அமர்வு வேளையில் வெளிப்படையாக வினாவுவதனுடன், அவ் நாட்டை விமர்ச்சிப்பதும் உண்டு. இவ்வேளையில் பூகோள சுற்று ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நாட்டினது நட்பு நாடுகள், அவ் நாடு பற்றி மேலாதிகமாக மிகைப்படுத்தி, ஜனநாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கு ஓர் திறமை படைத்த நாடாக, அவ் நாட்டை சித்தரிப்பதும் புதுமையானது ஒன்றல்லா.
பூகோள சுற்று ஆய்வுக்கு ஆக்கப்படும் நாடு, தனது நாடு பற்றிய அறிக்கையில் – எவற்றை நடைமுறைப்படுத்துகிறோம், எவற்றை நடைமுறைபடுத்தவுள்ளோம், ஏன் எதற்காக சில விடயங்களை செய்யவில்லை போன்ற ஓர் புரண அறிக்கையை, பூகோள சுற்று ஆய்வு செயற்குழுவிடம் குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிப்பார்கள் – இதை தேசிய அறிக்கை என்பார்கள். இதேவேளை – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்தின் விசேட பூகோள சுற்று ஆய்வு பிரிவு, தமது அறிக்கையை சமர்பிக்கும் அதே வேளை, குறிப்பிட்ட நாட்டின் வேலை திட்டங்களை முன்னேடுக்கும் சிவில் சமூக அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் அவ் நாடு பற்றிய குறை குற்றங்களை குறிப்பிட்ட தவணைக்குள் முன்பு சமர்ப்பிப்பார்கள். இதை ஐ.நா. மொழியில் ‘பங்குதாரர்களுடைய அறிக்கை’ என்பார்கள். பங்குதாரர்களுடைய அறிக்கை ஐ.நாவினால் தொகுக்கப்பட்டு, சுருக்மான அறிக்கையாக வெளிவரும்.
இவ் அறிக்கைகளை யாவற்றையும், ஆய்வுக்கு உள்ளாக்கப்படுத்தப்படும் நாட்டுடன், பேச்சுவார்த்தை சமரசம் போன்றவற்றை செய்வதற்காக, ஐ.நா.மனித உரிமை சபையின், நாற்பத்து ஏழு அங்கத்துவ நாடுகளினால், தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடுகளின் பிரதிநிதி குழு ஒன்று நியமிக்கப்படும். இதை ‘மூவர் குழு’ (Troika) என அழைப்பார்கள்.
இதனை தொடர்ந்து ஓர் குறிப்பிட்ட நாளில், பூகோள சுற்று ஆய்வு செயற்குழு கூட்டத் தொடரில், ஓர் குறிப்பிட்ட நாடு மீதான ஆய்வு பாரீசிலீக்கப்படும். இவ்வேளையில் மற்றைய அங்கத்துவ நாடுகள், தமது சந்தேகங்கள், அக்கறைகளை, அஞ்சங்கள், ஆதங்கங்களை வெளிப்படுத்துவார்கள்.
இவ் ஆய்வு நடைபெற்று சரியாக நாற்பத்தி எட்டு (48) மணித்தியாலங்களிற்குள் – ‘மூவர் குழு’, மனித உரிமை ஆணையாளரது காரியாலயத்தின் துணையுடன், ஆய்விற்கு உள்ளாக்கப்பட்ட நாட்டுடன் சமரசம் செய்து, ஓர் ஆய்வின் அறிக்கையை பூகோள சுற்று ஆய்வின் செயற்குழு கூட்டத் தொடரில் சமர்ப்பிப்பார்கள்.
இவ் அறிக்கையில் – ஆய்விற்கு உள்ளாக்கப்பட்ட நாடு, எந்த எந்த நாடுகளின் வினாக்களை வரவேற்றுள்ளது, ஏவற்றை நிராகரித்துள்ளது போன்ற உள்ளடக்கங்களை கொண்டதாக காணப்படும். இவ் அறிக்கை பூகோள சுற்று ஆய்வுக்கு செயற்குழு கூட்டத் தொடரில் ஏற்றுகொள்ளப்பட்டிருந்தாலும், அவ் குறிப்பிட்ட நாடு, இரு வாரத்திற்குள் தமது நிலைபாட்டில் சில மாற்றங்களை செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதனை தொடர்ந்து வரும், ஐ.நா.மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், இவ் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, சபையின் ஒப்புதல் பெறப்படும். அவ் வேளையில், ஆய்விற்குள்ளாக்கப்பட்ட நாடு, மீண்டும் தமது கருத்துக்களை முன் வைக்க அனுமதிக்கபடும். அத்துடன் அங்கத்துவ நாடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும், கருத்துக்களை முன் வைக்கலாம்.
இன்றுவரையில் நாற்பத்தியொரு பூகோள சுற்று ஆய்வின் செயற்குழு கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளதுடன், ஐ.நா. அங்கத்துவ நாடுகளிற்கான மூன்று சுற்றுக்கள், ஆய்வு செய்து முடிந்துள்ள நிலையில், தற்பொழுது நாடுகளிற்கான நான்காவது சுற்று இடம்பெறுகிறது.
சிறிலங்காவிடம் கேள்வி எழுப்புவதற்கு…..
இதன் அடிப்படையில், 2023 பெப்ரவரி 1ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள பூகோள சுற்று ஆய்வின் செயற்குழுவின் 42ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பான பூகோள சுற்று ஆய்வின் நான்காவது சுழற்சி குறித்து விவாதிக்கப்படும்.
இதற்கான சிறிலங்காவின் தேசிய அறிக்கை, பதின்மூன்று (13) பக்கங்கள் மற்றும் ஒரு உயர்மட்ட மூன்று (83) பத்திகளைக் கொண்டதாக . காணப்படுவதுடன், சிவில் சமூகத்தினரின் அறிக்கை பதினேழு (17) பக்கங்கள் மற்றும் (82) பத்திகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இவ் அறிக்கையில் சில முக்கிய சிவில் சமூக அமைப்புக்கள், செயற்பாட்டாளர்களதும் அறிக்கைகள் ‘காலம் கடந்து சமர்பிக்கப்பட்ட அறிக்கை’ என்ற அடிப்படையில் தவிர்க்கப்பட்ட போதிலும், அவர்களது உள்ளடங்கங்கள் மற்றைய இணை அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் சிறிலங்கா பற்றிய பூகோள சுற்று ஆய்விற்கு, இவ் முறை பிரித்தானியா, அல்ஜீரியா, கட்டார் ஆகிய நாடுகள் ‘மூவர் குழு’ வாக செயற்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெறவுள்ள இவ் நாற்பத்திரண்டாவது அமர்வில் – பல நாடுகள் சிறிலங்காவிடம், ஐநா பொதுச்செயலாளர் வங்கி கி மூனிடம் வாக்குறுதியளிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் குறித்து கேள்வி எழுப்புவதற்கு காத்திருப்பதாக நம்பப்படுகிறது. அத்துடன் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் – PTA என அறியப்படும் உலகில் மிக மோசமான பயங்கரவாத சட்டம் பற்றியும், மேலும் எழுபத்து நான்கு வருடங்களாக தமிழர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்வு இன்றுவரை நடைமுறைபடுத்தப்படாது உள்ளது பற்றி, குறிப்பாக யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்களாக நேரத்தையும் காலத்தையும் சாட்டுபோக்குகள் குறி காலம் கடத்துவது பற்றி பல நாடுகள் சிறிலங்காவிடம் வினாவுவதற்கு ஆயுத்தமாகவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
சிங்கள பௌத்த அரசுகளை பொறுத்த வரையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒழுங்காக சிங்களமயம், பௌத்தமயம், சிங்கள குடீயேற்றம், இராணுவமயத்தை தாம் திட்டமிட்டது போல் ஒழுங்காக நடைபெற்றால் – காலபோக்கில் வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு அரசியல் தீர்வு என்ற பேச்சு அறவே ஏற்படாது என்பதே. சர்வதேசம், சிங்கள பௌத்தவாதிகளின் இவ் சிந்தனையை தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது.
முதல் மூன்று சுழற்சிகளும்
சிறிலங்கா மீதான முதலாவது பூகோள சுற்று ஆய்வு, 12வது அமர்வில் 2008 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அப்போது வங்களதேஸ், கேமரூன், உக்ரைன் ஆகிய நாடுகள் ‘‘மூவர் குழு’ வாக செயல்பட்டன. அப்போது, ஐம்பத்தாறு (56) உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்விகள் கேட்டதால், இலங்கைக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
சிறிலங்கா மீதான இரண்டாவது சுழற்சி நவம்பர் 2012இல் 18வது அமர்வில் நடைபெற்றது. அப்போது – இந்தியா, பெனின், ஸ்பெயின் ஆகிய நாடுகள் ‘‘மூவர் குழு’களாக’ செயல்பட்டன. இந்த சுழற்சியில், சிறிலங்காவை கேள்விக்குட்படுத்தப்பட்ட உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை தொண்ணூற்று எட்டு (98). பூகோள சுற்று ஆய்வின் செயற்குழுக் கூட்டங்களில் கேள்வி எழுப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில், சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பிய நாடுகள் சாதனை படைத்துள்ளன. நூற்று தொள்ளாயிரத்து மூன்று (193) உறுப்பு நாடுகளில் ஏறக்குறைய ஐம்பது வீதமான நாடுகள் கேள்விகளை எழுப்பி சிறிலங்காவின் மிக மோசமான மனித உரிமை நிலைமையை உலகறிய செய்தன.
மூன்றாவது சுழற்சி நவம்பர் 2017 இல் 28வது அமர்வில் நடைபெற்றது. இந்தச் செயல்பாட்டில் எண்பத்து எட்டு (88) நாடுகள் சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. அப்போது – புருண்டி, தென் கொரியா, வெனிசுலா ஆகிய நாடுகள் ‘‘மூவர் குழு’களாக’ செயல்பட்டன.
வெளிப்படையாகச் சொல்வதென்றால், பூகோள சுற்று ஆய்வு செயல்பாட்டின் போது அவர்கள் கூறியதையோ அல்லது தாங்களகாவே முன்வந்து கொடுத்துள்ள உறுதிமொழிகளை சிறிலங்கா ஒருபோதும் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது!
சுழற்சி 01 02 03 04
அமர்வு 2வது 14வது 28வது 42வது
ஆய்வு நாள் 13/05/2008 1/11/2012 15/11/2017 01/02/2023
அறிக்கை A/HRC/8/46 A/HRC/22/16 A/HRC/37/17 —
தேதி 05/06/2008 18/12/2012 29/12/2017 —
வினாவிய நாடுகள் 56 98 88 —
வினா ஏற்றல் 45 110 177 —
வினா மறுத்தல் 16 94 —
குறிப்பிடப்பட்டது/ 08 53 —
தாமதமானது
மூவர் குழு உக்ரைன் பெனின் புருண்டி பிரித்தானியா
கமரூன் இந்தியா தென் கொரியா அல்ஜீரியா
பங்களதேசம் ஸ்பெயின் வெனிசுலா கட்டார்
ஏற்றுகொள்ளுதல் = இவர்களது அறிக்கைகள், மற்றும் பரிந்துரைகளை சிறிலங்காவின்
ஆதரவை பெறுகின்றனா.
மறுத்தல் = இவர்களது அறிக்கைகள், மற்றும் பரிந்துரைகளை சிறிலங்காவின்
ஆதரவை பெறவில்லை.
தாமதம்/குறிப்பு = சிறிலங்கா பின்னர் பதிலளிக்கும் அல்லது சுட்டிக்காட்டும் – இது நிராகரிப்பதற்கு
பதிலாக ஒரு இராஜதந்திர பதில்
சிறிலங்கா மீதான கடந்த பூகோள சுற்று ஆய்வின் சுழற்சிகளில்,பதில்கள் கொடுப்பதைநிராகரித்து அல்லது தாமதப்படுத்தியுள்ளது. இராஜதந்திர ரீதியாக மற்ற நாடுகளின் பரிந்துரை அல்லது அறிக்கையை கவனத்தில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அத்தகைய சில பரிந்துரைகளை கீழே தருகிறேன்:
கேட்கப்பட்ட வினாக்கள்
பல நாடுகள் சிறிலங்காவை: OP-CATஐ அங்கீகரிப்பது மற்றும் ரோம் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது – நீதிமன்றத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான சட்டத்தை உருவாக்குதல்; – ICCPRக்கு இரண்டாவது விருப்ப நெறிமுறையை அங்கீகரிக்கவும்; வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை அங்கீகரிப்பதற்கான முயற்சிகளைத் தொடரவும்; – பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவதற்கான மாநாட்டை அதன் உள்நாட்டு அமைப்பில் முழுமையாக இணைத்தல்; – கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றில் பல சட்டங்களை ஏற்றுக்கொள்வது; மற்றும் மரண தண்டனையை ஒழிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க வேண்டும் என்பதுடன்….
சிறிலங்காவில், நிறைவேற்று அதிகாரத்தை ஒருங்கிணைத்தல்; அத்துடன் முன்னாள் யுத்த பகுதிகளின் இராணுவமயமாக்கல்; – காணாமல் போதல், சித்திரவதை, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்கள் உடன் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டி கொண்ட அதேவேளை; -பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகள்; மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்துதல்; – மத சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை; மற்றும் வன்முறைச் செயல்களைத் தடுத்தல், எஞ்சிய மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி, நல்லிணக்கம் மற்றும் சமாதான முன்னெடுப்புகளை தொடருமாறு சிறிலங்கா ஊக்குவிக்கப்பட்டது.
மனித கடத்தலுக்கு எதிராக ஒரு மூலோபாய திட்டத்தை உருவாக்கவும்; – அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயல்பாட்டில் மெதுவான முன்னேற்றம் குறித்து நாடுகள் கவலை தெரிவித்தன. மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதலுக்குப் பிந்தைய சவால்களைத் தீர்ப்பதற்கும் ஆக்கபூர்வமான அணுகுமுறையை வலியுறுத்தினார்கள். மனித உரிமைகள் பேரவையின் தீர்மான உறுதிமொழிகளை அமுல்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு பல நாடுகள் சிறிலங்காவை வலியுறுத்தின.
பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அதிக பணிகள் உள்ளன. தண்டனையின்றி கொலைசெய்தல் பலீயில்வன்முறைக்கு ஆளாக்குதல் போன்ற பல குற்றங்களை அதிகரிப்பதையிட்டு கவலைகள் தெரிவித்தனர். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் அமைதியை கட்டியெழுப்ப முன்னுரிமை திட்டம் வேண்டுமெனவும் கேட்டுகொண்டனர்.
ஐ.நா.மனித உரிமை சபையின் ஒரு பகுதியான பூகோள சுற்று ஆய்வின் செயல்முறையிலிருந்து, நாம் இதுவரை கற்றுக்கொண்டது என்னவென்றால், மற்றைய மனித உரிமை கண்காணிப்புகளான – ஒப்பந்த மற்றும் பணிக்குழுக்களுக்கு மேலாக இது வேறுபட்ட பொறிமுறையாகத் தோன்றினாலும், இறுதியில் பூகோள சுற்று ஆய்வுக்கு மற்றைய பொறிமுறைகள் போல, ஒரு நாட்டைத் தங்கள் கடமைகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக தண்டிக்கும் உரிமை அறவே இவ் பூகோள சுற்று ஆய்வுக்கும் கிடையாது. ஐ.நா. மொழியில் கூறுவதனால் இதுவும் மற்றைய வழிமுறைகள் போல், “பெயரிடுட்டு அவமானப்படுத்துதல்” என்பதே உண்மை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான தலைமை காரியாலயம் ஜெனிவாவில் உள்ளது. இங்கு தான் தமிழர்கள் நன்கு அறிந்த ஐ.நா.மனித உரிமை சபை உள்ளது. மனித உரிமையை பொறுத்த வரையில், இதற்கு மேல் ஒர் நிறுவனம் உலகில் வேறு நியூஜோர்க்கிலோ, வியன்னாவிலோ இருக்க முடியாது. ஓர் நாட்டின் அரசியல் செயற்பாடுகளானால், அது நிட்சயம் ஐ.நா.வின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபையில் அவற்றை முன்னெடுக்க முடியும் என்பது யாதார்த்தம்.
2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் – அசாதரணமான விடயமென தெரிந்தும், அவற்றை சுயநல தேவைகள் கருதி முன்னொழிவது, இனம் இனத்தை சாரும் என்ற முது மொழிக்கு அமைய – கள்ளர்கள் கள்ளர்களுடனும், மோசடியாளர் மோசடியாளருடனும், பேய்காட்டு பெயர்வழிகள் பேய்காட்டு பெயர்வழிகளுடனும் இணைவது இன்று சர்வசாதரணமாகியுள்ளது. இவை போன்ற செயற்பாடுகள் பௌத்த சிங்கள அரசுகளிற்கு சார்பானதுடன், தமது சுயநல தேவைக்கு நிதியை தேடி அலையும் செயற்பாடு என்பதை, யாவரும் அறிவார்கள்.
கடந்த ஐ.நா.மனித உரிமை சபையின் 51வது கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, எதிர்வரும் பெப்ரவரி கடைசி வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள 52வது கூட்டத்தொடரில், சிறிலங்கா விடயம் முக்கிய நிகழ்ச்சி நிரலில் இடம்பெற மாட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறிலங்கா அரசு சார்பற்ற – நேர்மையாக விசுவசமாக தமிழ் மக்கள் சார்பாக, ஐ.நா.வில் மீக நீண்ட காலமாக பரப்புரைகளை மேற்கொள்ளும் அமைப்புக்கள், வழமை போல் தமது பரப்புரைகளை முன்னெடுப்பார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.